செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பவே கைது நடவடிக்கை- ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி பேட்டி

Published On 2019-08-22 03:44 GMT   |   Update On 2019-08-22 03:44 GMT
காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பவே தனது தந்தையை கைது செய்திருப்பதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
சென்னை:

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ப. சிதம்பரத்தின் மகனும் மக்களவை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட கார்த்தி சிதம்பரம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த கைது நடவடிக்கையானது மேல்மட்டத்தினருக்கு வளைந்து கொடுக்கும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பழிவாங்கும் மற்றும் கீழ்த்தர செயல். அரசியல் பழிவாங்கும் செயலாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எந்த அவசியமும் கிடையாது.  காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை மந்திரியின் தோற்றத்தினை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.



இந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.  அரசியல் ரீதியாக மற்றும் சட்டப்பூர்வ முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே கைது நடவடிக்கை நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News