செய்திகள்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி, வருமானவரி, சுங்கத்துறை அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை

Published On 2019-08-22 03:19 GMT   |   Update On 2019-08-22 03:19 GMT
வருமானவரித்துறை, சுங்கத்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் வரும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.) சார்பில் ஆண்டு அறிக்கை-2019 தாக்கல் முகாம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் தொடங்கி உள்ளது. இந்த முகாம் தொடர்ந்து வரும் 31-ந்தேதி வரை நடக்கிறது. வருமானவரித்துறையில் வரி செலுத்துவது போன்று சரக்கு மற்றும் சேவை வரித்துறையில் வணிகர்கள் 3 மாதம், 6 மாதம், 9 மாதம் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வணிகர்கள் வரும் 31-ந்தேதிக்குள் ஆண்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கையாளர்களும், பல்வேறு நிறுவனங்களும் இதற்கு போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் நிதித்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையில் வரி செலுத்துபவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், புள்ளி விவரங்கள் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் வரும் 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஆட்டோமொபைல் உற்பத்தி, இரும்பு வணிகம், சேவை துறை, தணிக்கை துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர்கள் கூறியதாவது:-

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி பொறுப்பை ஏற்ற உடனேயே துறையை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஒவ்வொரு மாநிலமாக சென்று வருமானவரித்துறை, சுங்கவரித்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) துறையில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து துறை மேம்பாட்டுக்கான ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் துறை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார். அத்துடன், நிதித்துறை மீது போடப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பது, வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையில் முகாம்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அத்துடன் துறை மேம்பாட்டுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறார்.

அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான வருமானவரித்துறை, சுங்கவரித்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வரும் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதுடன் துறை மேம்பாடு குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இவ்வாறு ஆணையர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News