செய்திகள்
மோசடி

ஆசிரியர் பணி வாங்கி தருவதாக 2 பெண்களிடம் ரூ.6 லட்சம் மோசடி

Published On 2019-08-21 12:12 GMT   |   Update On 2019-08-21 12:12 GMT
ஆசிரியை வேலை வாங்கி தருவதாக 2 பெண்களிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை:

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த திருமோகூர் சொர்ண மீனா நகரைச் சேர்ந்த கண்ணன் மனைவி முத்துபிரியா (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆசிரியர் தேர்வு (டெட்) எழுதி இருந்தார்.

அப்போது சிவகங்கை மாவட்டம் மேல சேத்தூரை சேர்ந்த முருகேசன் மற்றும் ராமையா ஆகிய 2 பேரும் எங்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் பலரை தெரியும், நீங்கள் பணம் கொடுத்தால் ஆசிரியர் வேலை வாங்கி தருகிறோம்’’ என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதனை நம்பிய முத்து பிரியா ‘‘எனக்கும் தங்கை மகாலட்சுமிக்கும் ஆசிரியை வேலைக்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று கேட்டு உள்ளார். அப்போது முருகேசனும், ராமையாவும் ‘‘நீங்கள் முதல்கட்டமாக தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் கொடுங்கள்’’ என்று கேட்டு உள்ளனர். அதன்படி முத்துபிரியாவும் ரூ.6 லட்சம் பணத்தை 2 பேரிடமும் கொடுத்து உள்ளார்.

ஆனாலும் முருகேசன் தரப்பினர் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்யவில்லை. நீண்ட நாட்கள் ஆகியும் வாங்கிய ரூ.6 லட்சம் பணத்தையும் திருப்பித்தர மறுத்து விட்டனர்.

இது தொடர்பாக முத்துபிரியா ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள முருகேசன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News