செய்திகள்
தனியார் எண்ணெய் ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்

கலப்பட மரச்செக்கு எண்ணெய் தயாரித்த ஆலைக்கு ‘சீல்’

Published On 2019-08-21 03:43 GMT   |   Update On 2019-08-21 03:43 GMT
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கலப்பட மரச்செக்கு எண்ணெய் தயாரித்த தனியார் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பட்டி ரோட்டில் ‘காளை மார்க்’ என்ற பெயரில் தனியார் மரச்செக்கு எண்ணெய் விற்பனை செய்யும் ஆலை உள்ளது. இதன் ஷோரூம் திருச்சியில் வேறு இடத்தில் உள்ளது. சென்னையிலும் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு பொதுமக்கள் மரச்செக்கு எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

சமீப காலமாக அங்கு எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்த பொதுமக்களுக்கு, அதில் கலப்படம் கலந்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த எண்ணெய் பாமாயில் போன்று இருந்துள்ளது. மேலும் அதனை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் உபாதைகள் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர், அங்கு டின்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கலப்பட எண்ணெய்களை பார்வையிட்டு இது குறித்து உரிய ஆய்வு நடத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. குருடாயில், தவிட்டு ஆயில், பாமாயில் உள்ளிட்டவைகளை கலப்படம் செய்து மரச்செக்கு எண்ணெய் என்ற பெயரில் போலியாக விற்பனை செய்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்து மரச்செக்கு ஆயில் ஆலைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்தனர். மேலும் எடமலைப்பட்டி புதூர் போலீசாரும் பாதுகாப்புக்காக வந்தனர்.

அங்கு அதிகாரிகள், மரச்செக்கு எந்திரம், டின்கள், பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் முதலியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால், ஆலை உரிமையாளர் இல்லை என்பதால் அங்குள்ள எண்ணையை பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல், ஆலையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அப்போது உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா கூறுகையில், ‘பாமாயில் மட்டும் 1000 லிட்டருக்கு மேல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், பாமாயில் விற்பதற்கான உரிமம் பெறப்படவில்லை. கலப்பட எண்ணெய் உணவை சாப்பிடுவதால்தான் நிறைய வியாதிகள் வருகிறது. தொடர்ச்சியாக அனைத்து மரச்செக்கு ஆயில் ஆலைகளிலும் சோதனை நடத்தப்படும்’ என்றார்.

Tags:    

Similar News