செய்திகள்
விநாயகர் சிலைகள்

இரணியல் அருகே 1½ அடி முதல் 10 அடி உயரத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள்

Published On 2019-08-20 09:58 GMT   |   Update On 2019-08-20 09:58 GMT
இரணியல் அருகே 1½ அடி முதல் 10 அடி வரை உயரம் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இரணியல்:

விநாயகர் சதுர்த்தி வருகிற 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.

இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்படும். மேலும் பூஜைகள் முடிந்த பிறகு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் பிர மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இங்கு 1½ அடி முதல் 10 அடி வரை உயரம் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிங்க வாகனத்தில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகள் 10 அடி உயரத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இதேப்போல மயில் வாகனம், குதிரை வாகனம், எலி வாகனம், காளை மாடு வாகனம், தாமரை இதழ் மீது அமர்ந்த விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகிறது. விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது தண்ணீருக்கும், சுற்று சூழலுக்கும் மாசு ஏற்படக்கூடாது என்பதற்காக விநாயகர் சிலை தயாரிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி விநாயகர் சிலைகள் வடிவமைக்க களிமண், கிழங்கு மாவு, தேங்காய் நார், மூங்கில், சவுக்கு மரங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

அதேப்போல இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளில் வர்ணம் பூசப்படுகிறது. பலவித வடிவங்களில் வண்ண மயமாக காட்சி அளிக்கும் இந்த விநாயகர் சிலைகளை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்தபடி செல்கிறார்கள்.

கண்ணாட்டுவிளையில் மட்டும் சுமார் 4 ஆயிரம் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு தயாரான சிலைகள் வாகனங்கள் மூலம் குமரி மாவட்ட இந்து முன்னணியினருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News