செய்திகள்
மழை

பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் கனமழை

Published On 2019-08-20 05:39 GMT   |   Update On 2019-08-20 05:39 GMT
பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று கனமழை பெய்தது. இதில் பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரமாக கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்கியது. வாழப்பாடி அருகே சேலம் - விருதாச்சலம் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள சிலோன் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய்கள் சகதியால் நிரம்பி உள்ளதால் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தது. அவர்கள் பக்கெட்டுகளில் எடுத்து தண்ணீரை வெளியேற்றினர்.

இதனால் அந்த பகுதி மக்கள் விடிய- விடிய தூங்காமல் தவித்தனர். மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர். மேலும் இந்த மழை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்பதால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

மாவட்டத்தில் அதிக பட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 115.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வாழப்பாடியில் 80.5, ஆத்தூரில் 38.6, சேலத்தில் 21.8, ஆனைமடுவில் 14, காடையாம்பட்டியில் 1, ஏற்காடு- 10.4, கரியகோவில் - 5, தம்மம்பட்டி - 3.2, ஓமலூர் - 1.4, மேட்டூர் - 0.2 மில்லி மீட்டர் என மாவட்டம் மொத்தம் 301.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Tags:    

Similar News