செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பொற்றாமரை குளத்து நீரால் அத்திவரதர் சிலை உள்ள அறையை நிரப்பக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-08-20 05:07 GMT   |   Update On 2019-08-20 05:07 GMT
பச்சை நிறத்தில் இருப்பதால் பொற்றாமரை குளத்து நீரை கொண்டு அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அறையை நிரப்பக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை தூர்வார கோரி சென்னை ஐகோர்ட்டில் அசோகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரை கொண்டு நிரப்ப போகிறீர்கள்?. அந்த தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் சி.காசிராஜன், ‘அனந்தசரஸ் குளத்தில் உள்ள அறையில் அத்திவரதர் சிலையை வைத்ததும், மழை பெய்ய தொடங்கி விட்டது. அந்த மழை நீர் மற்றும் இயற்கையாகவே குளத்தில் உள்ள ஊற்றுநீர் சிலை உள்ள அறையை நிரப்பி விட்டது’ என்றார்.

பின்னர், காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் காமராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘அனந்தசரஸ் குளம், கோவிலில் உள்ள ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து ஆய்வு செய்ததில், நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மை உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளது. குடிநீருக்கு இணையான தரம் கொண்ட நீராக உள்ளது. ஆனால், பொற்றாமரை குளத்து நீர் மட்டும் பச்சை நிறத்தில் மாறி உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா, ‘மழை நீரால் அனந்தசரஸ் குளம் நிரம்பாவிட்டால், கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை கொண்டு நிரப்பலாம்’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, ‘பொற்றாமரை குளத்தின் நீர் பச்சை நிறத்தில் இருப்பதாக கூறுவதால், அந்த நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அறையை நிரப்பக்கூடாது’ என்று உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Tags:    

Similar News