செய்திகள்
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த காட்சி.

அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சி- 200 பேர் கைது

Published On 2019-08-19 16:25 GMT   |   Update On 2019-08-19 16:25 GMT
பொய் வழக்கு போடுவதை கண்டித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:

சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில் நள்ளிரவில் போதையில் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம் போட்ட வடமாநில ஆண்கள்- இளம்பெண்களை தட்டிக்கேட்ட உள்ளூர் இளைஞர்களை தாக்கி பொய்வழக்கு போட்ட போலீசாரை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களின் சார்பில் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

 அதன்படி போராட்டம் நடத்த வீராம்பட்டினத்தை சேர்ந்த பொதுமக்கள் , அரசியல் கட்சியினர் மற்றும் இயக்க நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை அரியாங்குப்பம் கொம்ïன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்த அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். 

இந்த ஊர்வலத்தில் விடுதலைசிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், ஆதவன், மீனவர் விடுதலைவேங்கைகள் மங்கையர்செல்வன், திராவிடர் கழகம் சிவ.வீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மோகன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், நாம்தமிழர்கட்சி இளங்கோ உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 ஊர்வலம் அரியாங்குப்பம் 4 முனை சந்திப்பு புறவழிச்சாலை வந்த போது போலீசார் பேரிகார்டுகளை வைத்து ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அமைதியான முறையில் ஊர்வலம் வந்த போது எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று போலீசாரிடம் போராட்டகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி அளிக்காததை கண்டித்தும் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பாபுஜி பேச்சுவார்த்தை நடத்தியும், மறியல் போராட்டத்தை கைவிடாததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.  
Tags:    

Similar News