செய்திகள்
விபத்து

மேலூரில் ஆம்னி பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்தது- 15 பேர் காயம்

Published On 2019-08-19 10:10 GMT   |   Update On 2019-08-19 10:10 GMT
முந்திச் செல்ல முயன்ற போது ஆம்னி பஸ் உரசியதில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் 4 வழிச்சாலையில் வாகனங்களை முந்திச் செல்வதில் ஏற்படும் பிரச்சினையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

இன்று காலை சென்னையில் இருந்து ராமநாதபுரம் சென்ற ஆம்னிபஸ் மேலூர் சத்தியபுரம் 4 வழிச்சாலையில் முன்னால் சென்ற பார்சல் லாரியை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ், லாரியின் பக்கவாட்டில் உரசியது.

பஸ் உரசியதில் தடுமாறிய லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதே நேரத்தில் ஆம்னி பஸ் சாலை தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு எதிர் திசைக்கு பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் எதிர்திசையில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த முதுகுளத்தூரைச் சேர்ந்த விஜயலட்சுமி, மதி, லட்சுமி, ராமநாதபுரம் பாலமுருகன், சீதாலட்சுமி உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து காரணமாக மேலூர் 4 வழிச்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சுங்கச்சாவடி மீட்பு வாகன அலுவலர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

Similar News