செய்திகள்
அரசு பணிமனையில் டிரைவர் சிவகுமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்

கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரி அரசு பணிமனையில் டிரைவர் தர்ணா போராட்டம்

Published On 2019-08-18 18:24 GMT   |   Update On 2019-08-18 18:24 GMT
கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரி அரசு பணிமனையில் டிரைவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்:

ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் திருப்பூர் காங்கேயம் குறுக்கு ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த இவர் 2017-ம் ஆண்டு திருப்பூர் பணிமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் தொடர்ந்து திருப்பூரிலேயே பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் குன்னூர் பணிமனைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். கடந்த 29-ந்தேதி முதல் அங்கு பணிக்கு சேரவும் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தனது குடும்ப சூழல் காரணமாக பணிமாறுதலை நிறுத்தி வைக்கக்கோரி போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், கோரிக்கையை ஏற்க நிர்வாகம் மறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, பணிமாறுதலுக்கு இடைகால தடை விதிக்கக்கோரி அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, பணிமாறுதலுக்கு இடைக்கால தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனால், சிவகுமார் தொடர்ந்து திருப்பூர் பணிமனையிலேயே பணியாற்றி வருகிறார். ஆனால், பணிமாறுதல் செய்யப்பட்ட காலத்தில் இருந்து சிவகுமாருக்கு, பணிமனையில் பணி ஒதுக்காமல் அதிகாரிகள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் பணிமனைக்கு சீருடையில் வந்த சிவகுமார், பணி ஒதுக்கக்கோரியும், கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரியும் பணிமனை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாலை வரை சிவகுமார் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் மாலையில் அங்கு வந்த அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 
Tags:    

Similar News