செய்திகள்
கன்னியாகுமரி படகு போக்குவரத்து

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் நீர் மட்டம் தாழ்வு - படகு போக்குவரத்து தாமதம்

Published On 2019-08-17 09:09 GMT   |   Update On 2019-08-17 09:09 GMT
கன்னியாகுமரியில் 2-வது நாளாக இன்று கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இதனையடுத்து படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபமும், திருவள்ளுவர் சிலையும் உள்ளது.

விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வர படகுபோக்குவரத்து நடைபெறும். தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும். விடுமுறை நாட்களில் அதிகாலை 5 மணிக்கே படகில் செல்ல டிக்கெட் வாங்க இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இன்று காலையிலும் படகு துறையில் டிக்கெட் வாங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். ஆனால் கன்னியாகுமரியில் வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு கடல் நீர் தாழ்ந்து காணப்பட்டது. இன்று 2-வது நாளாக இந்நிலை உருவானது.

இதன் காரணமாக இன்று காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கவில்லை. பகல் 10.30 மணிக்கு நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2.30 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.

இதற்கிடையே முக்கடல் சங்கமத்திலும் இன்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இந்திய பெருங்கடலும், அரபிக்கடலும் சீற்றமாக இருந்ததால், முக்கடல் சங்கமத்தில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடலில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேலும் அரபிக்கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக கோவளம் பகுதியை சேர்ந்த மீனவர்களும் குறைந்த அளவே கடலுக்கு சென்றனர்.

Tags:    

Similar News