செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொள்ளையர் தாக்குதலில் உயிர் இழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்- முதல்வர் உத்தரவு

Published On 2019-08-16 23:05 GMT   |   Update On 2019-08-16 23:05 GMT
கிருஷ்ணகிரி அருகே கொள்ளையர் தாக்குதலில் உயிர் இழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுஞ்சாலை கிராமம், ஆவல்நத்தம் கூட்டு ரோடு சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த விற்பனையாளர் ராஜா அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்து உயிர் இழந்தார். இந்த துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த டாஸ்மாக் ஊழியர் எம்.ராஜாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிர் இழந்த எம்.ராஜா குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மறைந்த ராஜாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தில் இருந்து குடும்ப நல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் பணப்பயன்கள் மற்றும் சட்டரீதியான இதர பணப்பலன்களையும் உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவரது மனைவிக்கு, அவரது கல்வி தகுதிக்கேற்ப சத்துணவு அல்லது அங்கன்வாடி மையத்தில் பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News