செய்திகள்
திருமாவளவன்

நாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்

Published On 2019-08-16 21:43 GMT   |   Update On 2019-08-16 21:43 GMT
நாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும் என்று தனது பிறந்தநாள் விழாவில் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாள் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கொண்டாடினர்.

விழாவில் ‘திருக்குறள் தடத்தில் திருமா’ என்ற தலைப்பில் கவிஞர் பழநிபாரதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. நக்கீரன் ஆசிரியர் கோபால் தலைமையில் ‘ஊடகவியலாளர் பார்வையில் திருமா’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. நிறைவாக தொல்.திருமாவளவன் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த ஆண்டு தமிழர் எழுச்சிநாளை முன்னிட்டு 2 முக்கியமான செயல்திட்டங்களை முன்வைக்க கடமைப்பட்டு இருக்கிறேன். முதலாவது, ‘தேசிய கல்விக் கொள்கை’ என்னும் பெயரில் மக்கள் மீது மத்திய அரசு வலிந்து திணிக்கும் ‘சனாதனக் கல்விக் கொள்கையை’ எதிர்த்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும். ஆகஸ்டு 17-ந் தேதி (இன்று) முதல், பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி வரை ஒரு மாத காலம் தமிழகம் முழுவதும் இந்த பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

கல்வி தொடர்பான அதிகாரம் பொதுப்பட்டியலில் உள்ளது என்றாலும் மத்திய அரசு, மாநில அரசுகளை ஒரு பொருட்டாகக் கருதாமல் எதேச்சதிகாரமாக கல்விக் கொள்கையை வரையறுத்து மாநிலங்களின் மீது திணிக்கிறது.

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை மெல்ல மெல்லச் சிதைக்கும் நோக்கில் மும்மொழிக் கல்வியைத் திணிக்கிறது. இந்தியை திணிப்பதே அதன் அடிப்படை நோக்கம். ‘ஒரே தேசம் ஒரே கலாசாரம்’ என்கிற ஆட்சியாளர்களின் கனவை நனவாக்குவதற்கு ஏற்ற வகையில்தான் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன், பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டு ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வெளியேற்றும் உள்நோக்கத்துடன் தான் 3-வது, 5-வது, 8-வது வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வைத் திணிக்க முயற்சிக்கின்றனர். 9-ம் வகுப்பில் இருந்து குலத்தொழிலையும் கற்க வேண்டும் என இந்த கல்விக் கொள்கை கூறுகிறது. எனவே தான், இந்த கல்விக் கொள்கையானது சனாதனக் கல்விக் கொள்கை என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும்; அதனை அனுமதிக்கக் கூடாது என மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, மீண்டும் பனைவிதைகள் ஊன்றும் வேலைத்திட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். ஆகஸ்டு 17-ந் தேதி(இன்று) முதல் தொடர்ந்து பனை விதைகளை நாடு முழுவதும் விதைக்க வேண்டும். இதற்கு காலக்கெடு ஏதுமில்லை. தொடர்ந்து இதனை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுகிறேன். இந்த இரண்டு செயல் திட்டங்களையும் சிறப்புற நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், வி.ஜி.பி. உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.சந்தோசம், தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, பொருளாளர் முகமது யூசுப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News