செய்திகள்
போராட்டம்

பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

Published On 2019-08-16 10:22 GMT   |   Update On 2019-08-16 10:22 GMT
சென்னை எழும்பூரில் பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் 5200 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனையாகும் தொகையை கடையில் வைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் டாஸ்மாக் கடையை உடைத்து உள்ளிருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் கடைக்குள் ரவுடிகள், சமூக விரோதிகள் அத்திமீறி உள்ளே புகுந்து ஊழியர்களை தாக்குகின்றனர். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் ராஜா சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இதை கண்டிக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் சார்பாக இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற பேரவை, விற்பனையாளர் நலச் சங்கம், அரசு பணியாளர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து கடையடைப்பு போராட்டத்தை நடத்தின.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கடைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும். விற்பனை பணத்தை கடைகளில் வந்து நிர்வாகமே வசூலிக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட ஊழியர் ராஜா குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கூட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கு அனுமதிக்கவில்லை.

எழும்பூர் கூவம் ஆற்றோரம் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் அங்கு திரண்டனர். 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

வழக்கமாக பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். ஆனால் இன்று ஒருசில கடைகள் திறக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டும் கடையை திறந்தனர்.

Tags:    

Similar News