செய்திகள்
ஜிகே வாசன்

சுதந்திரமாக கருத்து சொல்ல ரஜினிக்கு உரிமை உண்டு - ஜி.கே.வாசன்

Published On 2019-08-15 07:36 GMT   |   Update On 2019-08-15 07:36 GMT
ஜனநாயக நாட்டில் கருத்து கூறும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அதை ஏற்பதும், ஏற்காததும் மற்ற கட்சிகளின் மனநிலையை பொருத்தது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சென்னை:

சுதந்திர தினத்தையொட்டி த.மா.கா. அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கியதை ஏற்கனவே நான் வரவேற்று இருக்கிறேன். இனி அந்த மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடையும். சுதந்திரமான வாழ்க்கை தரம் இருக்கும். முதலீடுகள் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதை அந்த பகுதி மக்கள் புரிந்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக காஷ்மீர் மாறும்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தில் மோடியையும், அமித்ஷாவையும் கிருஷ்ணன், அர்ஜுனனுடன் ஒப்பிட்டு இருக்கிறார். ஜனநாயக நாட்டில் கருத்து கூறும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அதை ஏற்பதும், ஏற்காததும் மற்ற கட்சிகளின் மனநிலையை பொருத்தது.

பொதுவாகவே தீவிரவாதம், பாதுகாப்பு ஆகியவற்றில் த.மா.கா. சமரசம் ஆகாது. அவற்றை இரும்பு கரம் கொண்டு அடக்கியே ஆக வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல் வேலூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதாக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இனி அந்த பகுதி மேலும் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், துணை தலைவர்கள் கோவை தங்கம், விடியல் சேகர், சக்திவடிவேல், தலைமை நிலைய செயலாளர் டி.என்.அசோகன், பிரபாகரன், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜு சாக்கோ மற்றும் சுரேஷ்பாபு, ராஜம் எம்.பி.நாதன், கக்கன், கே.ஆர்.டி. ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News