செய்திகள்
மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்

தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ரூ.2.91 கோடியில் கட்டிடம்

Published On 2019-08-14 18:30 GMT   |   Update On 2019-08-14 18:30 GMT
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 91 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட உள்ளது.
தேனி:

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேனி நாடாளுமன்ற தொகுதியில் இந்த 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடங்கி உள்ளன.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது தேனி மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் எந்திரங்கள் ஆகியவை தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வருகிறது. அங்கு இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தாலுகா அலுவலகத்திலும் போதிய இடவசதி இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க தேனியில் அரசு சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக பாதுகாப்பான இடம் தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள காலியிடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ரூ.2 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அரசு சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் பொதுப்பணித்துறையின் கட்டுமான பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு, சமதளப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இடத்தை தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்டமதிப்பீடு, பணிகள் மேற்கொள்ளும் காலகட்டம் போன்றவற்றை அவர் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News