செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கோவை, நீலகிரி மாவட்ட மழை சேதம் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2019-08-14 07:47 GMT   |   Update On 2019-08-14 07:47 GMT
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை சேதம் தொடர்பாக தலைமை செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

கோவை, நீலகிரி மாவட்டங்களில் அண்மையில் பெய்த தென்மேற்கு பருவ மழையினால் கடும் சேதம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

உடனடியாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக தலைமை செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் எஸ்.கே.பிரபாகர், ஹர்மந்தர்சிங், ராதா கிருஷ்ணன், பீலே ராஜேஷ், விக்ரம்கபூர், ககன்தீப்சிங் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பருவ மழை மீண்டும் பெய்யும் சூழலில் எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் மற்றும் மீட்பு நிவாரண பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News