செய்திகள்
கன்னியாகுமரி கடற்கரை

சுதந்திர தினத்தையொட்டி குமரி கடற்கரை கிராமங்கள்- ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

Published On 2019-08-13 08:58 GMT   |   Update On 2019-08-13 08:58 GMT
சுதந்திர தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்:

நாட்டின் 73-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

சுதந்திர தினத்தையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சியும் இன்று நடந்தது.

பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகையும் நடந்து வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோர கிராமங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜுகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரெயில்களில் சோதனை மேற்கொண்ட போலீசார் பயணிகளின் உடமைகளையும் பரிசோதித்தனர்.

ரெயில்வே தண்டவாளங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை, பணகுடி, நாங்குநேரி ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள். பாதுகாப்பு பணிக்கு ஷிப்ட் முறையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடந்தது. நாகர்கோவிலில் 115 பேர் மீதும், தக்கலை சப்-டிவிசனில் 157 பேர் மீதும், குளச்சல் சப்-டிவிசனில் 209 பேர் மீதும், கன்னியாகுமரி சப்-டிவிசனில் 266 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News