செய்திகள்
பக்ரீத் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் ஈத்கா மைதானத்தில் இன்று சிறப்பு தொழுகை நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

Published On 2019-08-12 11:14 GMT   |   Update On 2019-08-12 11:14 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இறை தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10ல் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேலான பள்ளி வாசல்களில், பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. தமிழக வக்பு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா சொந்த ஊரான பனைக்குளத்தில் நடந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டார்.

ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் சார்பில் ராமநாதபுரம்-மதுரை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டி சார்பில் இஸ்லாமியா பள்ளி விளையாட்டு திடலில் தொழுகை நடந்தது. கீழக்கரையில் உள்ள 13-க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

ராமநாதபுரம் வெளிப் பட்டினம், தங்கப்பா நகர் மதரஷா, பாரதி நகர், ஏர்வாடி, எக்ககுடி, கமுதி. முதுகுளத்தூர், சாயல் குடி, பனைக்குளம், பெரிய பட்டினம், ரகுநாதபுரம், திருப் புல்லாணி, தேவிபட்டினம், இருமேனி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, அழகன்குளம், பெருங்குளம், தொண்டி சித்தார் கோட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து ஜூம்ஆ பள்ளி வாசல்களிலும் பெருநாள் தொழுகை நடந்தது.

முன்னதாக பள்ளி வாசலில் பேஷ் இமாம்கள் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள் குறித்து சொற் பொழிவாற்றினர். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

தொழுகை முடிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல், மதரஸா மற்றும் வீடுகளில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து ஆடு, மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர்.

தவ்ஹீத் ஜமாத் சார்பில் பல இடங்களில் திறந்த வெளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சொந்த ஊரில் நடைபெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

Tags:    

Similar News