செய்திகள்
சோலையார் அணை

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம்

Published On 2019-08-12 10:33 GMT   |   Update On 2019-08-12 10:33 GMT
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால் அப்பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
கோவை:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அதனையொட்டியுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அணைகளின் நிலவரம்:

சோலையார் அணை 160 அடி கொண்டது. இந்த அணையின் தற்போதைய நீர்மட்டம் தனது முழு கொள்ளவையும் தாண்டி 162.89 ஆக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணமாக அணையில் இருந்து 2 ஆயிரத்து 653 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 36 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 847 கன அடி வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 37 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ளது. அணைக்கு 1,127 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 23 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொண்டது. இந்த அணையின் நீர் மட்டம் 16.63 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 66 கனஅடி நீர் வருகிறது. 24 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் தற்போது 76 அடியாக உள்ளது. வினாடிக்கு 66 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. வினாடிக்கு அணையில் இருந்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நேற்று மாலை 6 மணியளவில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


Tags:    

Similar News