செய்திகள்
சிறையில் அடைப்பு (கோப்பு படம்)

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் இளம்பெண் தற்கொலை - கைதான கணவர் சேலம் சிறையில் அடைப்பு

Published On 2019-08-08 12:29 GMT   |   Update On 2019-08-08 12:29 GMT
திருமணமான 2 ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து கைதான கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது25). கூலித்தொழிலாளி. இவருக்கும், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள புத்தகரம் பகுதியை சேர்ந்த ஷீபா (20) என்பருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு மெர்லினா என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

கடந்த 2-5-19 அன்று கணவன்-மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஷீபா உடலில் மண்எண்ணை ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கலைவாணி ஆஸ்பத்திரிக்கு சென்று ஷீபாவிடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஷீபா பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தருமபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின் முடிவில் மஞ்சுநாத் மற்றும் இவரது தாயார் சத்யா ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் இளம்பெண் ஷீபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து காரிமங்கலம் போலீசார் வழக்கில் மாற்றம் செய்து பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். பின்னர் கைதான அவரை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மஞ்சுநாத்தின் தாயார் சத்யா (45) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News