செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பேனர்களை வைக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு தலைவர்கள் அறிவுரை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-08-08 04:03 GMT   |   Update On 2019-08-08 04:03 GMT
அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பேனர்களை வைக்கக்கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கும்படி அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஐகோர்ட்டு உத்தரவிட்டும், பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதாகவும், இதை தடுக்காத தலைமை செயலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஐகோர்ட்டு மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் காணொலி காட்சி மூலம் வழக்கை விசாரித்தனர்.

அப்போது சட்டவிரோத பேனர்களை தடுக்காத அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

அண்மை காலங்களில் தமிழகத்தில் போலீஸ்காரர்கள், பொதுமக்களால் தாக்கப்படும் சம்பவம் அதிகம் நடைபெறுகிறது. இது, தமிழகத்தில் மோசமான சட்டம்-ஒழுங்கு நிலவுகிறது என்பதை காட்டும் அறிகுறிகளாகும்.

ஏற்கனவே, போலீசார் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்தநிலை தொடர்ந்தால், மிகப்பெரிய பேரழிவை விளைவுகளை சமுதாயம் சந்திக்க நேரிடும்.

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் எடுக்கும் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. அண்மையில் கூட கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை 70 சட்டவிரோத பேனர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் வைத்துள்ளனர். எங்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, நிகழ்ச்சி முடிந்த பின்னர், இதுபோன்ற பேனர்களை அதிகாரிகள் அகற்றுவதால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது? அதுவும் இந்த பேனர்கள் எல்லாம் நடுரோட்டில் வைக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது? பேனர்கள் வைக்கும்போதே அதை தடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருந்தனர்?

பொதுவாக சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மேலும், அரசியல் கட்சி தலைவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்கள் பேனர்களை வைக்கின்றனர்.

எனவே, தொண்டர்களுக்கு தலைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும். அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பேனர்களை வைக்காதீர்கள் என்று தங்களது கட்சித் தொண்டர்களை, தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இந்த சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். அவருக்கு கால அவகாசம் வழங்குகிறோம். இது அரசுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு ஆகும்.

இவ்வாறு கருத்து கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News