செய்திகள்
மரணம்

கண்டமங்கலம் அருகே தனியார் பால்விற்பனை ஊழியர் மின்வேலியில் சிக்கி பலி

Published On 2019-08-07 09:51 GMT   |   Update On 2019-08-07 09:51 GMT
கண்டமங்கலம் அருகே தனியார் பால் விற்பனை ஊழியர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டமங்கலம்:

புதுவை திருபுவனை அருகே உள்ளது வாதானூர். இந்த கிராமம் தமிழகம்-புதுவை எல்லையில் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர். அய்யனார் (வயது 35).

இவர் திருக்கனூரில் உள்ள தனியார் பால்விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

வாதனூரில் உள்ள விவசாயநிலத்தில் சிலர் மரவள்ளி கிழங்கு பயிரிட்டு இருந்தனர். காட்டுபன்றிகள் வயல்களுக்குள் புகுந்து மரவள்ளிகிழங்குகளை சேதபடுத்தி வந்தன.

இதை தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர்கள் காட்டுபன்றிகள் புகாமல் இருக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைத்திருந்தனர்.

இன்று அதிகாலை அய்யனார் அங்குள்ள வயல்வெளிக்கு சென்றார். அப்போது மின்வேலி இருப்பது தெரியாமல் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனடியாக திருக்கனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தனர், அய்யனார் பிணமாக கிடந்த பகுதி எங்கள் பகுதி இல்லை. தமிழகத்தை சேர்ந்த கண்டமங்கலம் போலீஸ்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்றனர்.

இதை தொடர்ந்து கண்டமங்கலம் போலீசாரும் அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் இது எங்கள் எல்லைக்குட்பட்டது இல்லை. புதுவை மாநிலத்திற்கு உட்டபட்ட பகுதி என்றனர். இதனால் கண்டமங்கலம் - திருக்கனூர் போலீசாருக்கு இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்ந்து அங்கு கிரமநிர்வாக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் அய்யனார் பிணமாக கிடந்த இடத்தை அளந்து பார்த்தபோது அது தமிழக எல்லையையொட்டி இருந்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார் அய்யனாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக புதுவையில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்வேலிலியில் சிக்கி இறந்த அய்யனாருக்கு காயத்ரி (வயது 26) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
Tags:    

Similar News