செய்திகள்
மழை

கோவை மாவட்டத்தில் 496 மி.மீ. மழை பதிவு - சிறுவாணி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Published On 2019-08-07 08:40 GMT   |   Update On 2019-08-07 08:40 GMT
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கோவை:

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக கோவையை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் 255 மி.மீ. மழையும், நேற்று 103 மி.மீ. மழையும் பெய்தது. சிறுவாணி அடிவாரத்தில் நேற்று 28 மி.மீ. மழை பெய்தது. அணையின் நீர் மட்டம் 870.48 மீட்டராக (கடல் மட்ட உயர அளவு) இருந்து ஒரே நாளில் 60 செ.மீ. உயர்ந்தது.

கடந்த 5 நாளில் சிறுவாணி நீர் மட்டம் 3.3 மீட்டர் வரை உயர்ந்து உள்ளது. கோவை சாடிவயலில் இருந்து சிறுவாணி அணைக்கு செல்லும் 12 கி.மீ. தூரமுள்ள வனப்பகுதி ரோட்டில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. பெரிய மரங்கள் ரோட்டில் விழுந்து கிடப்பதாதல் வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரியாறு, சின்னாறு, ஏழு வாய்க்கால், தொளாயிரம் மூர்த்தி கண்டி உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நொய்யல் ஆற்றில் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி அணைகட்டில் இருந்து புதுக்குளம், உக்குளம், நரசம்பதி, கொளரம்பதி மற்றும் செல்வ சிந்தாமணி, குமாரசாமி குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் 20 சதவீதம் வரை குளங்கள் நிரம்பி உள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இன்று காலை லேசான மழை பெய்தது. கோவை ராமநகர் சத்தியமூர்த்தி சாலையில் ரோட்டோரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரடைந்து பெய்து வருகிறது. இரவு பகலாக பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார்அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் குடைகளை பிடித்துக் கொண்டு சிரமத்திற்கு மத்தியில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் சிரமத்திற்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சோலையார் அணையில் 64 மிமீ மழையும், வால்பாறையில் 64 மிமீ மழையும், சின்னக்கல்லாரில் 107 மிமீ மழையும், அதிகபட்சமாக நீராரில் 98 மிமீ மழையும் பெய்துள்ளது. இப்போது பெய்துள்ள மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நடுமலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.


Tags:    

Similar News