செய்திகள்
கார்த்திகேயன்

கார்த்திகேயனை காவலில் விசாரிக்க கோரிய சிபிசிஐடி மனு மீது இன்று விசாரணை

Published On 2019-08-07 08:18 GMT   |   Update On 2019-08-07 08:18 GMT
நெல்லையில் 3 பேர் கொலையில் கைதான கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய சிபிசிஐடி மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
நெல்லை:

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே உள்ள வீட்டில் நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ந் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் அணிந் திருந்த 21 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து பாளை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி நெல்லையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை (வயது 33) கைது செய்தனர். அவர் கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகளை கக்கன்நகர் பகுதியில் இருந்தும், 21 பவுன் நகைகள் பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள கார்த்திகேயன் வீட்டில் இருந்தும் மீட்டனர். பின்னர் போலீசார் கார்த்திகேயனை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கு ஆவணங்களை நெல்லை மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணையை ஜே.எம்.1-வது கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. சார்பாக ஜே.எம்.5-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. அணில் குமார், ஜே.எம்.1-வது கோர்ட்டில் கார்த்திகேயனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (7-ந் தேதி ) புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று மாஜிஸ்திரேட்டு பாபு அறிவித்தார். அப்போது கைதான கார்த்திகேயனை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து இன்று மாலை கார்த்திகேயனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News