செய்திகள்
சோலையார் அணை

வால்பாறையில் தொடர் மழை - சோலையார் அணை கிடுகிடு உயர்வு

Published On 2019-08-05 10:29 GMT   |   Update On 2019-08-05 10:29 GMT
வால்பாறையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.
வால்பாறை:

வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு அவ்வப்போது கனமழையும், பல நேரங்களில் லேசான மழையும் பெய்து வந்தது.

பின்னர் படிப்படியாக மழை குறைந்து விட்டது. பல நாட்கள் மழையே பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் 4 நாட்கள் கனமழை கிடைத்தது. இதனால் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அணையான சோலையார் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதனை தொடர்ந்து கடந்த 1 வார காலமாக முற்றிலும் மழை நின்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சோலையார் மின் நிலையம்-1 ஒரே ஒரு மின் உற்பத்தி மோட்டார் மட்டும் இயக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு 42 மெகாவாட் மின் உற்பத்திக்குப்பின் 265.86 கன அடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்)சோலையார் அணை 30, வால்பாறை 21, சின்னக்கல்லார் 44, நீராரில் 50 என பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 80.31 அடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News