செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கன மழை

Published On 2019-08-05 08:52 GMT   |   Update On 2019-08-05 08:52 GMT
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது.
கூடலூர்:

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் தூறிய வண்ணம் உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மிதமாக சாரல் மட்டும் தூறியது. இதனால் அணைக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரவில்லை. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் கன மழை பெய்தது.

இதனால் அணைக்கு நீர் வரத் தொடங்கியது. 152 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவது வழக்கம். தற்போது இந்த அணையின் நீர் மட்டம் 113.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது அணையில் மொத்தம் 1442 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதே போல 71 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 30.52 அடியாக உள்ளது. அணைக்கு 133 கன அடி தண்ணீர் வருகிறது. 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணையில் 390 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 57 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.10 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் மொத்தம் 126.93 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 126 அடி உச்ச நீர் மட்டம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 74.78 அடியாக உள்ளது. அணைக்கு 5 கன அடி தண்ணீர் வருகிறது. 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணையில் 34.19 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 30.4 மி.மீ மழையும், தேக்கடி பகுதியில் 13.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. அணை பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News