செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் குடிநீர் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ள காட்சி

ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை

Published On 2019-08-05 04:28 GMT   |   Update On 2019-08-05 06:58 GMT
நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 1 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அமலுக்கு வருவதால் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 17 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடையைக் காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிகளில் ஒன்றாக, சென்னை ஐகோர்ட்டும், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏற்று, நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 1 லிட்டர் அளவிலான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு, விற்பனைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக, இந்த தடை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டத்தில் தற்போது 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 


மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி உள்ள பகுதிகளில் இந்த குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட 10 இடங்கள், குன்னூர் நகராட்சியில் 4 இடங்கள், கூடலூர் நகராட்சியில் 6 இடங்கள், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்கள், 11 பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சுற்றுலாத் துறை சார்பில் தொட்டபெட்டா மலைச் சிகரம், உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய இடங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா, அரசினர் ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்கள் என மாவட்டத்தில் 70 குடிநீர் ஏ.டி.எம்.கள் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த குடிநீர் ஏடிஎம் எந்திரங்களில் லிட்டருக்கு ரூ.5 என்ற கட்டணத்தின் அடிப்படையில் நாணயத்தை செலுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும்.

இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு வெகுவாகக் குறையும் என்பதால் பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

Tags:    

Similar News