செய்திகள்
தற்கொலை

நெல்லையில் தூக்கு போட்டு மாணவி தற்கொலை - நீட் தேர்வில் தோல்வி குறித்து உருக்கமான கடிதம்

Published On 2019-08-03 11:52 GMT   |   Update On 2019-08-03 11:52 GMT
நெல்லை அருகே நீர் தேர்வில் தொல்வியடைந்ததால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது48), ஆட்டோ டிரைவர். இவரது மகள் தனலட்சுமி (18). இவர் பிளஸ்-2 படித்து விட்டு, மருத்துவம் படிக்க ‘நீட் தேர்வு’ எழுதியிருந்தார். இந்த நிலையில் ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து விட்டார்.

மேலும் அவரை மேற்படிப்பு படிக்க எந்த கல்லூரியிலும் சேர்க்காமல் வீட்டில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி தனலட்சுமி, நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்று விட்டு திரும்பிய அவரது தாயாரும், உறவினர்களும் மாணவி தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்து அழுதனர்.

சம்பவ இடத்துக்கு தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தனலட்சுமி உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார்.

‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் வெற்றி பெற்று டாக்டராகி இருந்தால் எனது மதிப்பு வேறு மாதிரி ஆகி இருக்கும். இப்போது வீட்டில் அடைப்பட்டு கிடக்கிறேன். என் தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல. வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் குடும்பத்தினர்களுக்கு உருக்கமாக கண்ணீர் சிந்தியும் எழுதியுள்ளார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News