செய்திகள்
நமச்சிவாயம்

அமைச்சரவை கூட்டத்துக்கு வர நமச்சிவாயம் ‘திடீர்’ மறுப்பு- சட்டசபையில் பரபரப்பு

Published On 2019-08-01 16:44 GMT   |   Update On 2019-08-01 16:44 GMT
புதுவை அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று கூடுவதாக இருந்தது. இக் கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவை அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று பகல் 11 மணிக்கு கூடுவதாக இருந்தது.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், கலெக்டர் அருண், செயலாளர்கள் பாண்டே, பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வதாக இருந்தது.

பட்ஜெட் மற்றும் புதுவை காரைக்கால் விமான நிலைய விரிவாக்கம், மத்திய அரசின் கட்டிடவியல் கல்வி நிறுவனம் அமைப்பது, தேங்காய்திட்டு துறைமுகத்தில் கடலோர காவல் படைக்கு தனி இடம் ஒதுக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட அஜண்டா தயாரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் நமச்சிவாயம் 11 மணிக்கு வரவில்லை. எனவே அவருக்காக காத்திருந்தார்கள். அவர் புதுவையில் தான் இருந்தார். ஆனாலும் ஏதோ ஒரு காரணமாக அவர் கூட்டத்திற்கு வரவில்லை என்று தெரிகிறது.

தொடர்ந்து அவருக்கு போன் செய்து பார்த்தனர். ஆனால் மதியம் 1.30 மணி வரை அவர் வரவில்லை. இதனால் மதியம் வரை அமைச்சரவை கூட்டம் நடக்கவில்லை.

நமச்சிவாயம் ஏதோ ஒரு வி‌ஷயத்தில் கோபமாக இருப்பதாகவும், அதனால் தான் பங்கேற்கவில்லை என்றும் கட்சி வட்டாரத்தினர் கூறினார்கள்.

Tags:    

Similar News