செய்திகள்
அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்த படம்

நின்ற கோலத்தில் அத்திவரதர் - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Published On 2019-08-01 00:35 GMT   |   Update On 2019-08-01 06:43 GMT
நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசிக்க மற்ற நாட்களை விட இன்று பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டினர். கூட்டம் அலைமோதி வருவதால் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகிறார்கள்.
சென்னை:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

31 நாட்கள் சயன கோலத்தில் (படுத்த நிலையில்) காட்சியளித்த அத்திவரதரை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வந்தனர்.

தினமும் 40 ஆயிரம் பேர் வரைதான் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினமும் 1½ லட்சத்துக்கும் அதிகமானோர் வந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் 4 பேர் இறந்தனர்.

இதையடுத்து கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ஏற்பாடுகளும், தரிசன வரிசையில் மாற்றங்களும் செய்யப்பட்டன. இதன் பின்னர் எந்தவித பிரச்சினையும் இன்றி பக்தர்கள் தினமும் அத்தி வரதரை வழிபட்டு வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை சுமார் 3 லட்சம் பேர் குவிந்தது குறிப்பிடத்தக்கது. தினமும் ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் பேர் வரை வருகிறார்கள். இதுவரை 48 லட்சம் பேர் தரிசித்துள்ளனர்.

சயன கோலத்தின் கடைசி நாளான நேற்று அத்திவரதர் மஞ்சள்நிற பட்டாடையில் காட்சியளித்தார். நேற்று மட்டும் 2½ லட்சம் பேர் வரை தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதரின் சயன கோலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி முதல் தரிசனம் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதன்பிறகு அத்திவரதரை அதே இடத்தில் நின்ற கோலத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இரவு முழுவதும் இந்த பணி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள் ஈடுபட்டனர்.

அவர்கள் நள்ளிரவில் அத்திவரதரை நின்ற கோலத்தில் வைத்தனர். இதன் பின்னர் அலங்காரங்கள் நடந்தன.

இன்று காலை 5 மணி அளவில் நீலநிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மனோரஞ்சிதம், செண்பகப்பூ, சுகந்தப்பூ, தாமரைப்பூக்களால் அத்திவரதருக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இன்று முதல் 17 நாட்களுக்கு நின்ற கோலத்திலேயே அத்திவரதர் காட்சியளிப்பார். சயன கோலத்தில் அருள் பாலித்தது போன்றே பல்வேறு வண்ணப்பட்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

அத்திவரதரை நின்ற கோலத்தில் முதல் நாளிலேயே தரிசிப்பதற்காக நேற்று நள்ளிரவிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இரவு 12 மணியளவில் இருந்தே கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். சுமார் 5 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள் அதிகாலை 5 மணிக்கு அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்தனர்.

இன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வீல் சேர்களில் செல்பவர்களுக்கு தனி வழியும், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பொது தரிசனத்துக்கு 3 வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இதன் வழியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவிகள் பலர் பள்ளி சீருடையுடனேயே நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர்.

அத்திவரதர் தரிசனத்துக்காக வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று 7 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

வி.வி.ஐ.பி., வி.ஐ.பி. என பலரும் அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்க வந்திருந்தனர். இதனால் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த வழியாக மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அத்திவரதரின் இடது பக்கம் வி.ஜ.பி.க்களும், வலது பக்கம் வி.வி.ஐ.பி.க்களும் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பொது தரிசனத்தில் வருபவர்கள் வலது பக்கமாக வந்து அத்திவரதரின் இடது புறத்தில் திரும்பி சாமி தரிசனம் செய்தனர். பல மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஒரு நொடி கூட சாமியை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை.

கண்ணை மூடி திறப்பதற்குள் திருப்பதி கோவிலைப் போல பக்தர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இதுபோன்று செய்யப்படுகிறது.

காலை 10 மணி வரையில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

நின்ற கோலத்தில் அத்தி வரதரை தரிசிக்க மற்ற நாட்களை விட இன்று பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டினர். கூட்டம் அலைமோதி வருவதால் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகிறார்கள்.

தொடர்ந்து 17 நாட்களும் அத்திவரதரை தரிசிக்க இதே போன்று அதிக அளவில் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 16 நாட்கள் மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் விடுமுறை நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

இறுதிநாளான 17-ந் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்று பெருமாளுக்கு உகந்த நாள் ஆகும். அன்றைய தினம் வரலாறு காணாத வகையில் கூட்டம் கூடும் என்று தெரிகிறது.

மாவட்ட கலெக்டர் பொன்னையா, போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Tags:    

Similar News