செய்திகள்
சந்திரயான்2

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை 2வது முறையாக உயர்த்தப்பட்டது

Published On 2019-07-27 03:26 GMT   |   Update On 2019-07-27 03:43 GMT
பூமியை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.
சென்னை:

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.

முதன் முதலாக கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.52 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. அதாவது பூமிக்கு அருகே குறைந்தபட்சமாக 230 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,163 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றி வரும் வகையில் விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை நேற்று இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது. தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடி நேற்று அதிகாலை 1.08 மணிக்கு சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள மோட்டாரை விஞ்ஞானிகள் 16 நிமிடம் இயக்கினார்கள்.

இதைத்தொடர்ந்து விண்கலத்தின் சுற்றுப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 251 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 54,829 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றி வருகிறது.

மூன்றாவது முறையாக வருகிற 22-ந் தேதி விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்படுகிறது. நான்காவது தடவையாக ஆகஸ்டு 14-ந் தேதி விண்கலத்தின் பாதை உயர்த்தப்படும் போது, அது பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி, சந்திரனின் சுற்றுவட்ட பாதைக்கு செல்லும்.

அதன்பிறகு சந்திரனை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ந் தேதி நிலவில் இறங்கும். விண்கலத்தின் ஆர்பிட்டர் சந்திரனுக்கு அருகாமையில் சுற்றி வர அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் தரை இறங்கும். அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குவதுதான் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். கரடு முரடான நிலப்பரப்பில் தரை இறங்கினால் லேண்டர் சேதம் அடையவோ அல்லது கவிழ்ந்துவிடவோ வாய்ப்பு உள்ளது.

எனவே ஆர்பிட்டர், தரை இறங்குவதற்கு உகந்த இடத்தை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்த பின்னர்தான் விக்ரம் லேண்டர் அதில் இருந்து பிரிந்து நிலவின் தரையில் இறங்கும். இதற்கு உகந்த சமதளமான பகுதியையே ஆர்பிட்டர் தேர்வு செய்யும். விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடம் சமதளமாக இருந்தால்தான், அதில் இருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவர் வாகனம் சுலபமாக நகர்ந்து சென்று ஆய்வு செய்ய முடியும்.

Tags:    

Similar News