செய்திகள்
சினேகன்

கிராமத்தானைப்போல் பாசம் காட்ட முடியுமா?- பாடலாசிரியர் சினேகன் பேச்சு

Published On 2019-07-25 06:04 GMT   |   Update On 2019-07-25 06:04 GMT
உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? சென்னையை அண்ணாந்து பார்க்கக் கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ என பயமாக இருக்கிறது என்று சினேகன் பேசியுள்ளார்.
சென்னை:

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை சொல்லும் படம் தொரட்டி. பி.மாரி முத்து இயக்கத்தில் ‌ஷமன் மித்ரு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். இந்த படத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினரும் கவிஞருமான சினேகன் பாடல்களை எழுதியுள்ளார்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சினேகன் பேசியதாவது:-

‘நிறைய பேர்களுக்கு தொரட்டி பாடல்கள் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதை சொல்லத்தான் ஆட்கள் இல்லை. இந்த படம் தான் எனக்கு சேரன், அமீர் படங்களுக்கு பிறகு பாடல்கள் எழுத மனநிறைவாக இருந்த படம்.

ஊரில் எங்கள் அப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம். இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? சென்னையை அண்ணாந்து பார்க்கக் கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ என பயமாக இருக்கிறது.

விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன. மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம் கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம்.

இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது. இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளராக மாறுவது பெரிய சிரமம். படத்தை வெளியிடுவது சிரமமான இந்த காலகட்டத்தில் படத்தின் கதையை உணர்ந்து வெளியிடும் எஸ்டிசி பிக்சர்சுக்கு நன்றிகள்.

இந்த படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன். நம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் தொரட்டியை போல படைப்பாக மாற்ற வேண்டும்.’

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News