செய்திகள்
விபத்தில் சேதம் அடைந்த அரசு பஸ்சை படத்தில் காணலாம்

பல்லடம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதியது - கண்டக்டர் உள்பட 7 பேர் காயம்

Published On 2019-07-24 18:21 GMT   |   Update On 2019-07-24 18:21 GMT
பல்லடம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பஸ் கண்டக்டர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.
பல்லடம்:

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் கோகி பகுதியில் இருந்து நெல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை சேலம் எடப்பாடியை சேர்ந்த முத்துவேல் (வயது 58) என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரி பல்லடம் அருகே பனப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் நெல் மூடைகளை இறக்க வந்தது.

இதுபோல் திருச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை மதுரையை சேர்ந்த மலைச்சாமி (38) என்பவர் ஓட்டி வந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த பிலிப்ராஜ் (50) என்பவர் கண்டக்டராக இருந்தார். இதில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த லாரி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பல்லடம்-தாராபுரம்-காங்கேயம் ரோடு பிரிவு அருகே சாலையில் திரும்ப முயன்றது. அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த அரசு பஸ், லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்து காரணமாக பஸ் பயணிகள் அலறினார்கள். தூக்கத்தில் இருந்த சிலர் நிலைதடுமாறி பஸ்சுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கண்டக்டர் பிலிப்ராஜ், அரியலூரை சேர்ந்த சாமிநாதன் (49), பரமத்திவேலூர் கள்ளிபாளையத்தை சேர்ந்த குழந்தைவேல் (48), அவரது மனைவி திலகம் (30), திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த நோசி (19), கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த வெங்கடாசலபதி (31), நாகப்பட்டினத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி ஆகியோர் காயம் அடைந்தனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மற்ற பயணிகள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர்.

இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News