செய்திகள்
வருமான வரி

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந்தேதி கடைசி நாள்

Published On 2019-07-24 04:22 GMT   |   Update On 2019-07-24 04:22 GMT
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு வருகிற 31-ந்தேதி கடைசி நாள் என்றும், நடப்பு ஆண்டு ரூ.92 ஆயிரத்து 500 கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி கமிஷனர் (நிர்வாகம்) என்.ரெங்கராஜ் சென்னை வருமான வரி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டியது இல்லை. அதே சமயத்தில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டும். 2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இந்த மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இந்த தேதியை தாண்டி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும். ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை உள்ளவர்கள் காலக்கெடுவை தாண்டி மார்ச் மாதம் வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். ஆனால் அவர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதமாக வசூலிக்கப்படும்.

இதேபோல ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் டிசம்பர் மாதத்துக்கு முன்பு தாக்கல் செய்தால் ரூ.5 ஆயிரமும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்-லைன் மூலமாகவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டும். இதற்காக வருமான வரித்துறை அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.85 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் ரூ.75 ஆயிரத்து 100 கோடி இலக்கை எட்டியிருந்தோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு ரூ.92 ஆயிரத்து 500 கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் 18 சதவீதம் இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் வரை 4 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அகில இந்திய அளவில் வரி வசூல் இலக்காக ரூ.13 ஆயிரத்து 50 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை 71 லட்சத்து 54 ஆயிரத்து 971 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது வங்கி கணக்குகளில் அதிகப்படியான தொகையை செலுத்தியவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் அதற்கான விளக்கம் கேட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருமான வரித்துறை துணை கமிஷனர் செந்தில்குமார் உடன் இருந்தார்.

Tags:    

Similar News