செய்திகள்
கீழ்பாலம் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியபோது எடுத்தபடம்

வல்லம் அருகே ரெயில்வே கீழ்பாலம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு - போலீசார் சமரச பேச்சுவார்த்தை

Published On 2019-07-23 12:02 GMT   |   Update On 2019-07-23 12:02 GMT
ஆலக்குடி ரெயில்வே கேட் அருகே கீழ்பாலம் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வல்லம்:

தஞ்சை திருச்சி இடையே மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று முடிவடைந்து உள்ளன. ரெயில்வே துறையினர் அனைத்து விதமான பணிகளையும் மேற்பார்வையிட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த ஆலக்குடி ரெயில் நிலையத்திலும் மின்சார ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆலக்குடி ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் அருகே லெவல் கிராசிங்குக்கு பதிலாக ரெயில்வே கீழ்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரெயில்வே கீழ்பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்வதற்காக ரெயில்வே அதிகாரிகள் இப்பகுதியில் கான்கிரீட் கட்டமைப்புகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது இப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து தற்காலிகமாக அப்பணியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஆலக்குடி ரெயில்வே கேட் அருகே கீழ்பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்வதற்காக ரெயில்வே காண்டிராக்டர்கள் , தொழிலாளர்கள் வந்தனர். இதனை அறிந்த ஆலக்குடி பகுதி விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ரெயில்வே கேட் அருகே ஒன்று திரண்டு ரயில்வே கீழ்பாலம் அமைக்கும் வேலையை தொடங்க வந்தவர்களிடம் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் அந்த பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு சென்றனர்.

ஆலக்குடி ரெயில்வே கேட் அருகே கீழ்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திரண்டதை அடுத்து வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ரெயில்வே உயர் அதிகாரிகளிடமும் போலீசார் பேசியதை அடுத்து கீழ்பாலம் அமைக்கும் பணியை தொழிலாளர்கள் நிறுத்தினர். இதனையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News