செய்திகள்
ஆஸ்பத்திரி போல் செயல்பட்ட மருந்துகடை

தோள்பட்டை வலிக்கு மருந்துகடையில் ஊசிபோட்ட டெய்லர் பலி

Published On 2019-07-23 08:29 GMT   |   Update On 2019-07-23 08:29 GMT
மாதனாங்குப்பம் அருகே தோள்பட்டை வலிக்கு மருந்துகடையில் ஊசிபோட்ட டெய்லர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த மாதனாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார் (43). டெய்லர். இவர் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார்.

நேற்று இரவு அவர் சூரப்பட்டில் உள்ள ஒரு மருந்து கடைக்கு சென்று தோள்பட்டை வலி நீங்க மாத்திரை கேட்டார். அப்போது ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்டால் வலி குணமாகும் என்று கடை உரிமையாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.

இதற்கு சம்மதித்த குமார் கடைக்காரர் பாஸ்கரனிடம் ஊசி போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் குமார் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அவரை கடைக்குள் தூக்கி சென்ற உரிமையாளர் பாஸ்கரன் மேலும் வேறு ஊசி போட்டு தரையில் படுக்க வைத்ததாக தெரிகிறது. இது பற்றி குமாரின் வீட்டுக்கு தகவல் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மீனா, மகள்கள் சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகியோர் பதறியடித்தபடி அங்கு வந்தனர்.

அவர்கள் குமாரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மீனா அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி வழக்குப்பதிவு செய்து மருந்து கடை உரிமையாளர் பாஸ்கரனை கைது செய்தார்.

கைதான பாஸ்கரன் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு மருந்து கடை நடத்தி வருகிறார். கடையின் உள்ளேயே 2 படுக்கைகளும் வைத்து இருந்தார்.

அவர் சிறு பிரச்சினைகளுக்காக மருந்து வாங்க வருபவர்களுக்கு டாக்டர் போல் ஊசியும் போட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News