செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதிகள்: எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு

Published On 2019-07-23 02:30 GMT   |   Update On 2019-07-23 02:30 GMT
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை :

காஞ்சீபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா தற்போது நடைபெற்று வருகிறது. தினசரி ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர். தமிழக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக அத்திவரதர் சிலையை இடமாற்றம் செய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கடந்த 20-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அத்திவரதர் தரிசனத்துக்காக, பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து? நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.



மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க அத்திவரதர் சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க முடியுமா? என்பது குறித்து கோவில் குருக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக சேலத்தில் நிருபர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அத்திவரதர் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் செல்கிறார். அங்கு அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த இருக்கிறார்.

அங்கு பக்தர்கள் தற்போது எவ்வாறு தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. என்னென்ன வசதிகள் செய்து கொடுத்தால் பக்தர்களின் இடையூறுகள் களையப்பட்டு நெரிசல் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க முடியும்? என்பது குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறார்.

ஆய்வு முடிவில், அத்திவரதர் தரிசனத்திற்காக வருகை தரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு உத்தரவுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் அதிகாரிகளுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக்காக செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதரை தரிசனமும் செய்கிறார்.
Tags:    

Similar News