செய்திகள்
வெளிநடப்பு செய்த எம்எல்ஏக்கள் சட்டசபை லாபியில் நின்றிருந்த காட்சி

புதுவை சட்டசபை சிறப்பு கூட்டம் - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Published On 2019-07-22 10:19 GMT   |   Update On 2019-07-22 10:19 GMT
புதுவை சட்டசபை சிறப்பு கூட்டத்தில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி:

புதுவையில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்க சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தில் முதல் அலுவலாக இரங்கல் தீர்மானமும், இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சில ஏடுகளை தாக்கல் செய்வார்கள் என சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார்.

அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் குறுக்கிட்டு பேசினார்.

அவர் பேசும்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. அப்படியிருக்கும்போது சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு அவசரமாக சபையை கூட்டுகிறீர்கள்? இந்த கூட்டத்தில் என்ன தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது? என உறுப்பினர்களுக்கு நேற்று இரவு 10 மணிக்குத்தான் தகவல் கொடுத்துள்ளீர்கள். இந்த தீர்மானத்தின் மீது எப்படி பேச முடியும்?

உறுப்பினர்களை இந்த சபை மதிக்கவில்லை. உறுப்பினர்களின் உரிமையை பறிக்கிறீர்கள் என பேசினார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதா உறுப்பினர் சாமிநாதன், இரவு 11 மணிக்குத்தான் சட்டசபை நிகழ்வுகள் குறித்த அலுவல் பட்டியல் கிடைத்தது. தகவல்களை திரட்டாமல் இவற்றைப்பற்றி எப்படி பேச முடியும்? என கேள்வி எழுப்பினார்.

ஆளும்கட்சி தரப்பில் அரசு கொறடா அனந்தராமன், சில முக்கியமான வி‌ஷயங்கள் தொடர்பாகத்தான் சபை கூட்டப்பட்டுள்ளது. நீட், நெக்ஸ்ட், இந்தி திணிப்பு, நீர்மேலாண்மை ஆகிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத்தான் சபையை கூட்டியுள்ளோம். இதை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என கூறினார்.

இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும், பா.ஜனதா உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்தனர். உறுப்பினர்கள் சபாநாயகரிடம்தான் முறையிட வேண்டும். ஆளும்கட்சி உறுப்பினர் எங்களுக்கு பதில்தர வேண்டிய அவசியமில்லை என்றனர். இதனால் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அன்பழகன், உறுப்பினர்களின் உரிமையை பறிப்பது மட்டுமில்லாமல், ஆளும்கட்சி உறுப்பினர்கள் மிரட்டுகின்றனர். இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார். அவருடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் வெளியேறினார்.

பா.ஜனதா உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரும், உறுப்பினர்களின் உரிமை பறிப்பதாகக்கூறி சபையிலிருந்து வெளியேறினர்.

என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் செல்வம் எழுந்து, உறுப்பினர்களை பேசக்கூட அனுமதிக்கமாட்டீர்களா? கருத்துக்களை தெரிவிக்க விட மாட்டீர்களா? இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் தலைமையில் உறுப்பினர்கள் திருமுருகன், சந்திரபிரியங்கா ஆகியோரும் வெளியேறினர். ஒட்டுமொத்தமாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News