செய்திகள்
ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

தட்டாஞ்சாவடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2019-07-22 10:03 GMT   |   Update On 2019-07-22 10:03 GMT
தட்டாஞ்சாவடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

புதுச்சேரி:

கடலூர் கீழ்கூத்தப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபு (வயது31). இவர் புதுவை தட்டாஞ்சாவடி காமராஜர் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கோபு பெட்ரோல் பங்கில் பணியில் இருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு கூறினர். அதன்படி கோபுவும் ரூ.200-க்கு பெட்ரோல் நிரப்பினார். அப்போது அவர்கள் பணத்துக்கு பதிலாக கிரெடிட் கார்டு கொடுத்து ஆன்-லைன் மூலம் பணத்தை எடுத்து கொள்ளுமாறு கூறினர். கோபு கிரெடிட் கார்டை பதிவு செய்தபோது அதில் மெசேஜ் வராததால் பணத்தை கொடுக்கும் படி கூறினார். இதையடுத்து அவர்கள் ரூ.200 கொடுத்து விட்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அவர்கள் கோபுவிடம் பணம் எடுக்கப்பட்டதாக தங்களது செல்போனில் மெசேஜ் வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கோபு அவர்களிடம் ரூ.200 கொடுத்து விட்டார்.

ஆனாலும் அவர்கள் கோபுவிடம் தகராறு செய்து இதுபோல் எவ்வளவு பேரிடம் பணம் மோசடி செய்தாய் என கூறி கோபுவை தாக்கினர். மேலும் அவர்களின் ஒருவர் கையில் அணிந்திருந்த காப்பினால் கோபுவின் முகத்தில் குத்தினார். மேலும் அவர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதில் முகத்தில் காயம் அடைந்த கோபு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பெட்ரோல்பங்க் ஊழியர் கோபுவை தாக்கிய 2 பேரையும் கைது செய்ய பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News