செய்திகள்
மரணம்

வில்லியனூர் அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி

Published On 2019-07-22 09:47 GMT   |   Update On 2019-07-22 09:47 GMT
வில்லியனூர் அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுநது 2½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே ஆரியபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி மீனா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களது 2½ வயது குழந்தை தியாஸ்ரீ. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது குழந்தையை திருக்காஞ்சி ஆண்டியார்பாளையத்தில் உள்ள மீனாவின் தாய்வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.

நேற்று (ஞாயிற்றுகிழமை) விடுமுறை என்பதால் குழந்தை பாட்டி வீட்டிலேயே இருந்தது. இதற்கிடையே மீனாவின் பெற்றோர் மங்கலம் கோல்டன் சிட்டியில் புதிதாக வீடுகட்டி வருகின்றனர். நேற்று கட்டிட பணிகளை பார்வையிட அவர்கள் தங்களுடன் குழந்தையையும் அழைத்து சென்றனர். அங்கு குழந்தை தியாஸ்ரீ தத்தி தத்தி நடந்து சென்று அங்கு இங்குமாக விளையாடி கொண்டிருந்ததால் மீனாவின் பெற்றோர் குழந்தையை கண்டு கொள்ளவில்லை.

மாலையில் குழந்தையை அழைத்து செல்ல விஸ்வநாதனும் மீனாவும் வீடுகட்டும் இடத்துக்கு வந்தனர். ஆனால் குழந்தையை காணாமல் திடுக்கிட்டனர். மீனாவின் பெற்றோரிடம் கேட்ட போது குழந்தை வெளியே விளையாடி கொண்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால் குழந்தை எங்கும் இல்லை.

சந்தேகம் அடைந்த அவர்கள் எதிரே மற்றொருவர் வீடுகட்டி வரும் இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள குடிநீர் தொட்டியில் குழந்தை தியாஸ்ரீ மூழ்கி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அலறியடித்துகொண்டு குழந்தையை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை விளையாடி கொண்டு இருந்த போது குடிநீர் தொட்டியில் தவறிவிழுந்து மூச்சுதிணறி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News