செய்திகள்
பிலிகுண்டுலுவில் இன்று காலை காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்த காட்சி

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தாமதமாக வருவது ஏன்? அதிகாரி விளக்கம்

Published On 2019-07-22 05:38 GMT   |   Update On 2019-07-22 07:16 GMT
கர்நாடக அணைகளில் திறந்து விட்ட தண்ணீர் முழுமையாக காவிரி ஆற்றில் வராததற்கு என்ன காரணம்? என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தர்மபுரி:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கடந்த 18-ந்தேதி 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 19-ந்தேதி நீர் திறப்பு 4ஆயிரத்து 495 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 20-ந்தேதி நீர் திறப்பு 8 ஆயிரத்து 810 கனஅடியாகவும், நேற்று நீர் திறப்பு 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் இந்த தண்ணீர் முழுமையாக தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் பிலிகுண்டுலுக்கு 500 கனஅடியும், நேற்று 700 கனஅடியும் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

கர்நாடகம் திறந்து விட்ட தண்ணீர் முழுமையாக காவிரி ஆற்றில் வராததற்கு என்ன காரணம்? என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.

கர்நாடக அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட்டால் அந்த தண்ணீர் 48 மணி நேரத்தில் பிலிகுண்டுலு வந்து அடையும். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காவிரி ஆறு வறண்டு போயிருந்தது. இதனால் கர்நாடகத்தில் திறந்து விட்ட தண்ணீர் வறண்ட ஆற்றில் உறிஞ்சப்பட்டது. மேலும் காவிரி ஆறு பாய்ந்தோடும் கர்நாடக பகுதிகளில் விவசாயத்திற்காக விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகிறார்கள். இது தவிர குடிநீர் திட்டத்திற்காகவும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் தான் கர்நாடகா திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக தமிழகத்திற்கு வரவில்லை. மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வருகிறது. மேலும் பிலிகுண்டுலுவில் இருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு செல்லும் தண்ணீரை மாதேஸ்வரன் மலைக்கோவில் மற்றும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய கர்நாடக அரசு தண்ணீர் எடுக்கிறது. இதனால் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் செல்லும் தண்ணீரும் உறிஞ்சப்படுவதால் மேட்டூர் அணைக்கு மிககுறைந்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது.



ஒகேனக்கல்லில் 700 கன அடி தண்ணீர் வந்தாலும் இடையில் உறிஞ்சப்படுவதால் மேட்டூருக்கு வெறும் 213 கன அடி தண்ணீரே செல்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் நீர் திறந்தால் மட்டுமே அந்த தண்ணீர் முழுமையாக மேட்டூர் வந்தடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News