செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published On 2019-07-21 07:55 GMT   |   Update On 2019-07-21 07:55 GMT
விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ. 24.10 கோடி மதிப்பீட்டில் சிக்கம்பட்டியில் இருந்து துட்டம்பட்டி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தாரமங்கலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார்.

மேலும் அவர் ரூ.5.25 கோடி மதிப்பில் கொங்கணாபுரம்- வடகரை வாய்க்கால் கரிமேடு சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும், தொளசம்பட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும் திறந்து வைத்தார்.

தாரமங்கலம் புறவழிச்சாலை இன்றைக்கு உங்கள் அனைவரது முன்பாக, கடவுளின் ஆசீர்வாதத்தோடு திறந்து வைக்கிறேன். இதைபோல 2 பாலங்களையும் திறந்து வைத்திருக்கின்றேன். இந்த புறவழிச்சாலை எந்த அளவுக்கு பயனுள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சாலை கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது

சாலை உட்கட்டமைப்பு மிக முக்கியமானது. எந்த ஒரு மாநிலத்திலும் சாலை உட்கட்டமைப்பு சிறந்து இருக்கின்றதோ, அந்த மாநிலம் தொழில் வளம் சிறந்த மாநிலமாக இருக்கும். அந்த வகையில் நம்முடைய தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டத்தில் சிறந்து விளங்குகிறது.

இந்தியாவிலேயே சிறந்த உட்கட்டமைப்பு மாநிலம் என்று சொன்னால் தமிழ்நாடு என பேசுகின்ற அளவுக்கு அம்மா அவர்கள் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கின்ற மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கின்றேன்.

இன்றைக்கு நெடுஞ்சாலை மற்றும் கட்டுமானம், பராமரிப்பு கோட்டத்தின் சார்பாக தாரமங்கலத்தில் ரூ.24 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 3.110 கி.மீ. நீளமுள்ள இந்த புதிய புறவழிச்சாலை பெரியாம்பட்டியில் தொடங்கி ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் சாலை துட்டம்பட்டியில் முடிவடைகிறது.

தொளசம்பட்டியில் ரூ.18.44 கோடியில் ஒரு ரெயில்வே மேம்பாலம், முத்துநாயக்கப்பட்டியில் ரூ.15.94 கோடியில் ஒரு ரெயில்வே மேம்பலாம், ஜெ.எஸ். டபிள்யூ. தொழில்சாலை அருகில் ரூ.19 கோடியில் ஒரு உயர்மட்டமேம்பாலம், குஞ்சாண்டியூரில் ரெயில்வே மேம்பாலம் ஆகவே ஓமலூரில் இருந்து மேட்டூர் வரை இருக்கின்ற ரெயில்வே குறுக்கே இந்த பாலங்கள் எல்லாம் விரைந்து கட்டிக் கொடுத்து மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும்.

அதுமட்டுமின்றி திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்காணபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை 4 வழிச்சாலையாக இந்த சாலை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசல் அற்ற சாலையாக உருவாக்கிக் தரப்படும்.

ஓமலூர் முதல் மேச்சேரி வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக அம்மாவுடைய அரசு திட்டமிட்டு அந்த பகுதியும் வளர்ச்சி அடைவதற்கு சாலை விரிவுப்படுத்தப்படும்.

இதைபோல் பவானி-மேட்டூர், மேட்டூர்- தொப்பூர் சாலை அகலப்படுத்தி அந்த பகுதியில் இருக்கின்ற வாகனங்கள் தங்கு தடையில்லாமல் செல்வதற்கு வழிவகை செய்யப்படும்.

இதற்கு மனமிகுந்து பொதுமக்கள் நிலம் கொடுத்தால் தான் சாலை அமைக்க முடியும். போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியம்.

இந்த லட்சியத்தின் அடிப்படையில் தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வாகன நெரிசல் இல்லாத சூழலை ஊருவாக்கி தந்து கொண்டிருக்கின்றோம். அம்மா கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

எல்லா வசதிகளும் வேண்டும் என்றால் உட்கட்டமைப்பு வசதி சிறக்க வேண்டும். இந்த உட்கட்டமைப்பு வசதியை மேற்படுத்துவதற்காகத்தான் இந்த புறவழிச்சாலையை அமைத்து இருக்கின்றோம்.

நம்முடைய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான மிகப்பெரிய தொழில்சாலை உருக்காலை வளாகத்தில் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை பெற்று அமைக்கவும் நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அதுபோல் குடிமாரமத்து பணிகள் விவசாயிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது. விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சொந்த தொகுதியான எடப்பாடிக்கு சென்றார். அங்குள்ள அரசு பள்ளியில் நடந்த விழாவில் அவர் பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார்.

மேலும், எடப்பாடி நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை சேகரிக்க ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட 18 பேட்டரி கார்களை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.

எடப்பாடி பஸ் நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம், புதிதாக கட்டப்பட்ட 3 ரேசன் கடைகள் உள்பட முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் ரூ.91.61 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கொங்கணாபுரம் போலீஸ் நிலையம், ரூ.39ž கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Tags:    

Similar News