செய்திகள்
கொலை

அடையாறில் காணாமல் போனவர் கொலை- தொழில் அதிபரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய பெண் வக்கீல்

Published On 2019-07-20 09:17 GMT   |   Update On 2019-07-20 09:17 GMT
சென்னை அடையாறில் காணாமல் போன தொழில் அதிபரை பணத்தகராறில் தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய பெண் வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:

சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் பரத் வாஜ் (வயது 50) தொழில் அதிபர். திருமணம் ஆகாத இவர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென காணாமல் போனார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் அடையாறு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுரேஷ் பரத்வாஜ் கடத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

காணாமல் போனஅன்று பெண் வக்கீல் பிரீத்தி என்பவர் வீட்டுக்கு பரத்வாஜ் சென்றுள்ளார். அவரிடம் விசாரித்ததில் பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு எழும்பவே அவர் தலைமறைவாகி விட்டார்.

அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்த சம்பவத்தில் குடுமி பிரகாசுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை கண்காணித்து வந்த நிலையில் பிரகாஷ், சுரேஷ், மனோகர் ஆகிய 3 பேர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவல் அதிர்ச்சி அடைய செய்தது. இந்த கொலையில் பெண் வக்கீல் மூளையாக இருந்து செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பரத்வாஜ் வீட்டில் வேலை பார்த்த பெண் மீது அவருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. அவரை அடைய வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்துள்ளார். ஒருநாள் அவரை ஆசைக்கு இணங்கும்படி அவர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதற்கு சம்மதம் தெரிவிக்காத வேலைக்கார பெண் வேலைக்கு வராமல் நின்று விட்டார். இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி பரத்வாஜ் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க முடியாத வேலைக்கார பெண் வக்கீல் பிரீத்தியின் உதவியை நாடியுள்ளார்.

அடையாறு இந்திரா நகரில் வசித்து வரும் பிரீத்தி சென்னை ஐகோர்ட்டில் தொழில் செய்து வருகிறார்.

சமரசம் செய்து பிரச்சனையை முடித்து வைப்பதாக கூறிய பிரீத்தி, பரத்வாஜை அணுகி பேசினார். அப்போது அவரின் பேச்சு மற்றும் பண வசதியை புரிந்து கொண்ட பிரீத்தி, வேலைக்கார பெண்ணை சேர்த்து வைப்பதாக கூறி ரூ. 65 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட வக்கீல் பிரீத்தி, வேலைக்கார பெண்ணை தன்னிடம் சேர்த்து வைக்காததால் ஆத்திரம் அடைந்த பரத்வாஜ், வக்கீலிடம் சொன்னபடி செய்யவில்லை என்றால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார். அதற்காக பிரகாஷ் தலைமையில் கூலிப்படையை அமைத்து உள்ளது தெரியவந்தது. இதையடுத்து பரத்வாஜை தீர்த்துக்கட்ட பிரீத்தி திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி பரத்வாஜை காசிமேட்டுக்கு வரவழைத்து கடலுக்குள் படகில் அழைத்து சென்று அடித்து கொலை செய்து உடலை கடலில் வீசியுள்ளனர்.


இந்த கொலை திட்டத்தை செய்து முடிக்க பேசிய பணத்தை அவர்களுக்கு பிரீத்தி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் உண்மையை சொல்லி தப்பிக்கொள்ள கூலிப்படையினர் முடிவு செய்தனர். அதன்படி போலீசில் சரண் அடைந்தனர்.

பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து பரத்வாஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ராஜா, சந்துரு, சதீஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள வக்கீல் பிரீத்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை முழுவதும் தேடி வருகிறார்கள். இரவு-பகலாக கண்காணித்து வரும் போலீசாருக்கு அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது செல்போன் ஆப் ஆகி இருப்பதால் அவர் எங்கு மறைந்து உள்ளார் என்பதை கண்டு பிடிப்பதில் சிக்கலாக உள்ளது. அவர் சென்னையை விட்டு தப்பி போகவில்லை என்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளை போலீசார் கண்காணித்து வருவதாகவும் தெரிகிறது.

தலைமறைவாகி உள்ள பெண் வக்கீலுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவரை பற்றிய தகவல்களை திரட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News