செய்திகள்
மணல் கொள்ளை நடந்துள்ள காட்சி

புதுவை அருகே உள்ள அரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து

Published On 2019-07-20 08:56 GMT   |   Update On 2019-07-20 08:56 GMT
புதுவை அருகே உள்ள அரிக்கமேடு பகுதி தற்போது பாதுகாப்பாற்ற நிலையில் இருக்கிறது. அங்கு மணல் கொள்ளை அதிகமாக நடப்பதால் வரலாற்று சின்னங்கள் அழியும் நிலை உருவாகி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை நகரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பத்தையொட்டி அரிக்கமேடு என்ற இடம் உள்ளது. இது ஆறு, கடலில் கலக்கும் கழிமுக பகுதி ஆகும்.

இந்த இடத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கிருந்து ரோமாபுரி, கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தக கப்பல்கள் சென்று வந்துள்ளன.

இந்தியாவில் உள்ள பழங்கால முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. தற்போது அந்த இடத்தில் துறைமுகமும், கட்டிடங்களும் முற்றிலும் அழிந்து கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது.

இங்கு 1945-ம் ஆண்டு பிரெஞ்சுகாரர்கள் காலத்தில் முதன் முதலில் ராபர்ட் எரிக் மார்டீனர் என்பவர் தலைமையில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது துறைமுக மதில்சுவர், கட்டிட தூண்கள், துறைமுகத்தின் இடிபாடுகள் போன்றவை புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஐரோப்பியர்கள் பயன்படுத்திய முத்து போன்ற பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்கால பொருட்கள் புதைந்து கிடந்தது கண்டெடுக்கப்பட்டது.

அதன்பிறகு 1989-லிருந்து 1994 வரை இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான வரலாற்று ஆதாரங்கள், பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

இங்கு அகழ்வாராய்ச்சி செய்த தகவல்களை கி.மு. 300 ஆண்டுகளில் இருந்தே இந்த துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. கி.பி. 1800-ம் ஆண்டு வரை இந்த பகுதி முக்கியத்தும் வாய்ந்த பகுதியாகவே இருந்து வந்துள்ளது. அதன்பிறகு அழிந்துவிட்டது.

தற்போது அந்த இடம் பாதுகாப்பாற்ற நிலையில் இருக்கிறது. அங்கு மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதனால் வரலாற்று சின்னங்கள் அழியும் நிலை உருவாகி உள்ளது.

வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனாலும் மத்திய தொல்லியல் துறையோ அல்லது மாநில அரசோ சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் பாராளுமன்றத்தில் இதுசம்பந்தமாக குரல் எழுப்பி இருக்கிறார். மத்திய அரசு, உரிய நிதி ஒதுக்கி மீண்டும் அந்த இடத்தில் அகல்வாராய்ச்சி செய்ய வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News