செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

நந்தனம், கே.கே.நகரில் 318 அடுக்குமாடி வீடுகள் விரைவில் கட்டப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2019-07-20 07:52 GMT   |   Update On 2019-07-20 07:52 GMT
சென்னை நந்தனம், கே.கே.நகரில் 318 அடுக்குமாடி வீடுகள் விரைவில் கட்டப்படும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று பொதுத்துறை, நிதித்துறை, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் 17 இடங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மந்தவெளி பாக்கம், கீழ்ப்பாக்கம், தோட்டக்காலனி, தாண்டர் நகர், என்ஜினீயர் காலனி, ஆர்.கே.நகர், எம்.கே.பி. நகர், அசோகா காலனி ஆகிய 7 இடங்களில் உள்ள அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை இடிக்கும் பணி முடிந்துள்ளது. மந்த வெளிப்பாக்கத்தில் 12 உயர் வருவாய் பிரிவு குடியிருப்புகள், கீழ்ப்பாக்கத்தில் 60 குடியிருப்புகள், தாண்டர்நகரில் 1,891 அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் கட்டும் பணி நடக்கிறது.

மேலும் நந்தனம் புதிய கோபுர திட்டத்தில் உள்ள 62 வாரிய வாடகை குடியிருப்புகளை இடிக்கும் பணி முடிந்துள்ளதால் ரூ.69.72 கோடியில் 102 உயர் வருவாய் பிரிவு குடியிருப்புக்கான பணி விரைவில் தொடங்கப்படும்.

இதேபோல் கே.கே.நகரில் இருந்த வணிக வளாகத்தை இடிக்கும் பணிகளும் முடிந்துள்ளதால் 216 குடியிருப்புகள் மற்றும் வணிக - அலுவலக வளாகங்கள் ரூ.227.26 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் அம்பத்தூரில் 408 குடியிருப்புகள் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்காக கட்டப்பட்டுள்ளது. சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சென்னை பாக்குப்பத்தில் 182 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஆரம்ப பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News