செய்திகள்
கபினி அணை

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2019-07-20 06:38 GMT   |   Update On 2019-07-20 06:38 GMT
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம்:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து கடந்த 18-ந் தேதி 2 ஆயிரத்து 906 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரத்து 64 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

124.8 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 91 அடியை எட்டியுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு 1,315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியை நெருங்கி உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று மாலை முதல் 7 அயிரத்து 564 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கர்நாடக விவசாயிகளின் தேவைக்கு உபரி நீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நாளை நள்ளிரவில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 39.59 அடியாகவும், நீர்வரத்து 217 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

Tags:    

Similar News