செய்திகள்
பெண்கள்

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

Published On 2019-07-19 23:17 GMT   |   Update On 2019-07-19 23:17 GMT
தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களுள் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவல் துறையினர் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், சிறப்பாகவும், மனித நேயத்தோடும், எவ்வித குறுக்கீடுமின்றி அவர்களது பணிகளை செய்ய, அ.தி.மு.க. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கின்றது.

மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசுக்கு அளித்தால், அவைகளை நிறைவேற்றவும், அரசு திட்டங்களில் உள்ள குறைகளை குறிப்பிட்டால், அவற்றை களையவும், அ.தி.மு.க. அரசு எப்பொழுதும் தயாராக உள்ளது.

கடந்த 8 வருடங்களாக காவல் துறையினர் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை, குற்றத்தடுப்பு, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருதல், தடுப்புச் சட்டங்களின் கீழ் காவலில் வைத்தல் போன்ற நடவடிக்கைகளினால் மாநிலத்தில் பெரும்பாலான குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை நான் கூறவில்லை, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உதாரணத்திற்கு கடைசியாக வெளிவந்த தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, நமது மாநிலத்தில் வன்குற்றங்கள் 10,844 ஆகும். ஆனால், கேரளாவில் 13,548 வழக்குகளும், கர்நாடகாவில் 19,648-ம், குஜராத்தில் 11,829-ம், ஒடிசாவில் 19,092-ம், அரியானாவில் 14,392-ம், ராஜஸ்தானில் 16,223 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன.

அதே அறிக்கையின் படி, நமது மாநிலத்தில் தாக்கலான சொத்து சம்பந்தமான குற்றங்கள் கடந்த 2016-ம் ஆண்டு 23,650 மட்டுமே. இது மாநிலத்தில் குற்றங்கள் தாக்கல் ஆவதும், குற்ற விகிதமும் மற்ற மாநிலங்களைவிட மிக குறைவாக இருந்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக கொலை உள்ளிட்ட சொத்து சம்பந்தமாக தாக்கலான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 297 வழக்குகளில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 499 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது 71 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வழக்குகளில் களவுபோன 66.5 சதவீத சொத்துகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி களவு போன சொத்துகளை மீட்பதில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பதை இந்த அவைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பெண்களின் நலனை காப்பதிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருவதால், நமது மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் குறைந்து வருகின்றன.



சிறுமி மற்றும் பெண்கள் கடத்தல் வழக்குகள் 2010-ம் ஆண்டு 1,464 ஆக இருந்தது, 2018-ம் ஆண்டு 907 ஆக, 38 சதவீதம் குறைந்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, இந்தியாவில், பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மெட்ரோ நகரங்களில் சென்னை முதல் நகரமாகவும், பெருநகரங்களில் (20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்கள்), கோயம்புத்தூர் முதல் நகரமாகவும் உள்ளது.

அ.தி.மு.க. அரசு, கடந்த 8 ஆண்டுகளாக காவல் துறைக் கான நிதியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது காவல் துறைக்கு ரூ.2,962 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அரசு நிதியை தொடர்ந்து உயர்த்தி வந்து, இவ்வாண்டு ரூ.8,084.80 கோடியை ஒதுக்கியுள்ளது.

காவல் துறையினரின் விரைவான நடவடிக்கை மற்றும் சி.சி.டி.வி. கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டதால், பெருமளவில் சங்கிலி பறிப்பு குறைந்துள்ளது.

காவல் துறையில் 9 ஆயிரத்து 694 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அக்காலிப் பணியிடங்களில் தற்போது, 969 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 8,427 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-2012 முதல் 2018-2019 வரை, காவல் துறைக்கான மானியக் கோரிக்கையின் போதும் மற்றும் பிற சமயங்களின் போதும் அறிவித்த மொத்த அறிவிப்புகள் 786 ஆகும். அவற்றுள் 616 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 163 அறிவிப்புகள் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், 99.1 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News