செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-19 16:33 GMT   |   Update On 2019-07-19 16:33 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

மத்திய அரசு வழங்கும் ஊதிய உயர்வை ரூ.1,500, ரூ.750-ஐ உடனடியாக நிலுவையுடன் வழங்க வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டபடி 7-வது ஊதியக்குழுவில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 5 வருடம் முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சிறிய அங்கன்வாடி மையங்களில் 3 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு பொது மையத்தில் மாறுதல் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.3,500 தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து நேற்று மாலை பாலக்கரை ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் வட்டார தலைவர்கள் கலைச்செல்வி (ஆலத்தூர்), வசந்தா (பெரம்பலூர்), நிர்மலா (வேப்பந்தட்டை) தமிழரசி (வேப்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு. சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அழகர்சாமி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் மணிமேகலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

சி.ஐ.டி.யு. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அகஸ்டின், துணைத் தலைவர்கள் கணேசன், ராஜ்குமாரன், தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கொளஞ்சி நன்றி கூறினார்.
Tags:    

Similar News