செய்திகள்
தமிழக சட்டசபை

மத்திய அரசின் நெக்ஸ்ட் தேர்வுக்கு சட்டசபையில் திமுக- அதிமுக எதிர்ப்பு

Published On 2019-07-19 06:37 GMT   |   Update On 2019-07-19 06:37 GMT
மத்திய அரசு கொண்டு வர உள்ள நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழக சட்டசபையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சென்னை:

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக எம்பிபிஎஸ் இறுதியாண்டில் நெக்ஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாராளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில்  தமிழக சட்டசபையில் இது தொடர்பாக திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 



தீர்மானத்தின் மீது பேசிய மு.க.ஸ்டாலின், “முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கொண்டு வர உள்ள நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும். இதற்காக மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய மருத்துவ கழக மசோதாவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். 

மருத்துவக் கல்லூரிகளை இயக்குவது மாநில அரசின் உரிமை. அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. விட்டுக்கொடுத்தால், மாநில மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு இயக்கும் சூழ்நிலை உருவாகும்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “நெக்ஸ்ட் தேர்வை அதிமுகவும் எதிர்க்கிறது. இந்த தேர்வு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்” என்றார்.
Tags:    

Similar News